தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட தலைவர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் அமுதா உள்ளிட்டோர் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அமலா தங்கதாயிடம் அளித்த மனு விவரம்:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விளை யாட்டு உபகரணம், நூலக புத்தகங்கள், கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும், பள்ளி பராமரிப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் பள்ளி மேலாண்மைக்குழு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
ஆரம்ப பள்ளிகளுக்கு நூலக புத்தகங்கள் வாங்க ரூ.5,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு நூலக புத்தகங்கள் வாங்க ரூ.13,000, விளையாட்டு உபகரணங்கள் வாங்க ஆரம்ப பள்ளிகளுக்கு ரூ.5,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.10,000 வரவு வைக்கப்படும்.
பள்ளி பராமரிப்பு மானியமாக தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் வரவு வைக்கப்படும்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தலைமையாசிரியரும் மேலாண் மைக்குழு தலைவரும் இணை ந்து பள்ளியின் வளர்ச்சிக்கு தேவை யான பொருட்களை வாங்குவது வழக்கமான நடைமுறை. ஆனால், தற்போது குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் இருந்து பொருட்களை வாங்க தலைமை ஆசிரியர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ.பால்ராஜ் கூறும்போது, “எந்தவிதமான எழுத்துப்பூர்வமான உத்தரவுகளும் வழங்கப்படாமல், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து தரமற்ற பொருட்களை அதிக விலையில் அவர்களே பள்ளிகளில் கொண்டு வந்து இறக்குகின்றனர். அதற்கான பணத்தை காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ பள்ளி மேலாண்மை குழுவில் தீர்மானம் நிறைவேற்றி வட்டார வளமையத்தில் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி தலைமை ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர். வாய்மொழியாக உத்தரவிடுவதால் பல கோடி ரூபாய் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது” என்றார் அவர்.