திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் குத்தகைதாரர் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்பிரசாதங்கள் கூடுதல் விலை மற்றும் தரமில்லாமல் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் மூலம் நேரடியாக லட்டு, முறுக்கு மற்றும் பஞ்சாமிர்தம் ஆகிய பிரசாதங்கள் விற்பனை செய்ய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லட்டு, அதிரசம், முறுக்கு ஆகியவைநேரடியாக கோயில் மூலம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பஞ்சாமிர்தம் மட்டும் நேரடி விற்பனை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது.
முதன் முறையாக தயாரிக்கப் பட்ட பஞ்சாமிர்தம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் விஷ்ணு சந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கோயில் பிரசாத ஸ்டாலில் அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.