தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் 10 பேருக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது.
இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கடந்த இரு வாரங்களாக கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், 574 பேர் தஞ்சாவூர், கும்பகோணம் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் நேற்று உயிரிழந்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் மா.கோவிந்தராவ் கூறியது: சென்னையுடன் வர்த்தகம், போக்குவரத்து என நெருங்கிய தொடர்பு இருப்பதால், தஞ்சாவூரிலும் கரோனா அதிகம் பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை இருக்கிறது. திருமணம், கோயில் விழாக்கள், அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு சென்றாலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மாவட்டத்தில் நாளொன்றுக்கு 2,400 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.