Regional03

நீலகிரி மாவட்டத்தில் வீடுவீடாக சென்று - வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ விநியோகம் :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர் (தனி) மற்றும் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் சீட்டுகள் (பூத் சிலிப்) சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு கிராமங்கள், வீதிகள் ஆகியவற்றில் எந்தெந்த தேதியில் வாக்காளர்சீட்டுகள் வழங்கப்படும் என்ற அட்டவணை அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், நியாய விலைக் கடைகள், சமுதாயக் கூடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்தப்படும்.

வாக்காளர் சீட்டுகள் சம்மந்தப்பட்ட வாக்காளருக்கோ அல்லது அவர் இல்லாத பட்சத்தில் அவரது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ வழங்கப்படும். வாக்காளர் சீட்டு பெற்றுக்கொண்டமைக்கு அத்தாட்சியாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்டுவரும் ஒப்புகை பதிவேட்டில் வாக்காளர்கள் கையொப்பமிட வேண்டும்.

மேலும் வாக்காளர் சீட்டுகள் வழங்குவதில் தவறு ஏதும் தெரியவந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டுவரும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான - 1800 425 2781ஐ தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT