சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 223 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அரசியல் ரீதியான ரவுடிகள், பழைய குற்றவாளிகள், ஜாமீனில் வெளிவந்தவர்கள், ரவுடி பட்டியலில் இடம் பெற்றவர்களை போலீஸார் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள 223 பதற்றமான வாக்குச்சாவடிகளில் ‘வெப்’ கேமரா பொருத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி நிறைவுபெற்றதும் மாதிரி வாக்குப்பதிவு வரும் 3-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடத்தப்பட்டு, ‘வெப்’ கேமரா மூலம் கண்காணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்ய தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் காவல் துறையுடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.