சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்வது தொடர்பான முன்னேற்பாடு பணி கூட்டம் சேலத்தில் நடந்தது. இதில், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் பேசினார். உடன் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார் உள்ளிட்டோர். 
Regional01

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று - முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு : வேட்பாளர்கள் பார்வையிட அனுமதி

செய்திப்பிரிவு

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், 80-வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இன்று தபால் வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், 80-வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் தபால் வாயிலாக வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளவர்களுக்கான வாக்குப்பதிவு தொடர்பாக நுண்பார்வையாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுடனான கூட்டம் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில், தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு தலைமை வகித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் பேசியதாவது:

சேலம் தெற்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 675 மூத்த குடிமக்களும், 112 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 787 பேர் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் இருந்து, தபால் வாக்குகளை சேகரிக்க 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் தலா ஒரு வாக்குச்சாவடி அலுவலர், காவல் துறை அலுவலர், நுண் பார்வையாளர், வீடியோ ஒளிப்பதிவாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.தபால் வாக்குப்பதிவு நாளை (இன்று) தொடங்குகிறது.

வாக்குப்பதிவின்போது, ரகசிய வாக்குப்பதிவு முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளில் தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்கள் விவரம் அனைத்து வேட்பாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிடலாம். அனைத்து வாக்குப்பதிவு நிகழ்வுகளும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்படும். தபால் வாக்குப்பதிவின் போது எவ்வித புகார்களுக்கும் இடம் தராத வகையில் வாக்குப்பதிவு பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜாஸ்மின் பெனாசிர், நுண்பார்வையாளர்கள், காவல் துறை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

SCROLL FOR NEXT