சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், திமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து. கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். படம்:எஸ். குரு பிரசாத் 
Regional03

ஜெயலலிதாவின் பேச்சை மறந்து அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி : எடப்பாடியில் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

'இனி ஒருபோதும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைக்காது' என்று ஜெயலலிதா அறிவித்திருந்த நிலையில், அதை மறந்து, அதிமுக-வினர் இப்போது பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளனர், என எடப்பாடி பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

முதல்வர் பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது, திமுக 9 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றது. அவரது சொந்த ஊரான நெடுங்குளத்தில் திமுக 200 வாக்குகளை கூடுதலாகப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது.

அந்த தேர்தலில் இங்கு மட்டுமல்ல, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணியை வெற்றி பெற்றதால், தமிழக மக்களின் மீது பிரதமர் மோடி கோபத்தில் இருக்கிறார். தமிழர்களாகிய நீங்களும் அவர் மீது கோபத்தில் இருக்கிறீர்கள்.

பெண்கள் பாலியல் துன்புறுத் தல்களுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக தான் குரல் கொடுத்தது. அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகியை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இதுபோன்ற துரோகங்களை அதிமுக அடுக்கடுக்காக செய்துள்ளது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது அதை, “டிவி-யில் பார்த்து தெரிந்து கொண்டதாக” கூறிய முதல்வர் பழனிசாமி, திமுக வெற்றியை மே 2-ம் தேதி தொலைக்காட்சியை பார்த்து தெரிந்து கொள்வார்.

முதல்வர் பழனிசாமி தனது சுயநலத்துக்காக தமிழக மக்களின் மானம், உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து விட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, “மோடியா? இந்த லேடியா? எனக் கேட்டு, இனி ஒருபோதும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைக்காது” என்று அறிவித்தார். அதை மறந்து, அதிமுக-வினர் இப்போது பாஜக-வுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் விசுவாசம் இல்லாத ஆட்சி இது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT