திருச்செந்தூர் அருகே தண்டுபத்து கிராமத்தில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்காக வந்த தேர்தல் பறக்கும் படையினர். 
Regional03

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் - அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை :

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணனின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்றுஇரவு திடீர் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு பணமோ, பொருட்களோ சிக்கவில்லை.

திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுகவேட்பாளராக அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் இருந்துவரும் இவரது வீடு மற்றும் பண்ணைத் தோட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைந்துள்ளது. அதையொட்டி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரது அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தொடர்பாக ரகசிய கூட்டம் நடைபெறுவதாக தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், சிறப்பு எஸ்ஐ பெஞ்சமின் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்றிரவு7 மணி அளவில் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

இதில் அங்கு ரகசியக் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. சுமார் அரை மணி நேர சோதனைக்குப் பின் பறக்கும் படையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இந்த சோதனை நடந்த போது அனிதா ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் இல்லை. அவர் பிரசாரத்துக்கு சென்றுவிட்டார். இந்த சோதனையால் தண்டுபத்து கிராமத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT