தபால் வாக்கை பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பள்ளி ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்ய தென்காசி மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள். இவர், தனது தபால் வாக்கை பதிவு செய்து, அதை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம், தபால்வாக்கு புகைப்பட ஆதாரத்துடன், தென்காசி காங்கிரஸ் வேட்பாளர் பழனி புகார் அளித்தார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் கருப்புசாமிக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். அவர்விசாரணை நடத்தி, ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாளை தற்காலிக பணிநீக்கம் செய்து, அதற்கான ஆணையை வட்டார கல்வி அலுவலர் மூலம் அனுப்பி வைக்க பள்ளி தாளாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணிதென்காசி மாவட்டச் செயலர் மாரிமுத்து, ஆட்சியரிடம் அளித்தமனுவில், “ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தபால் வாக்கை பெறாத நிலையில், அவரது தபால்வாக்கை முறைகேடாக வெளிநபருக்கு வழங்கி, தபால் வாக்கின்ரகசியத்தை முகநூலில் பதிவிடச்செய்த அதிகாரிகள் மீதும், முகநூலில் பதிவிட்ட நபர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.