நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சார்பில் ‘மக்களாட்சியை விதைப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற கருத்தைக்கொண்டு குருத்துக்குளி கின்னஸ் பூங்காவில், நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் 400 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை நேற்று தொடங்கி வைத்தனர்.
அதன்பின்பு நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ கூறும்போது ‘‘கடந்த தேர்தலில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்பகுதியில் குறைந்த அளவில்தான் வாக்குகள் பதிவாகியுள்ளன. சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் 100 சதவீதம் தங்களது வாக்குகளை பதிவு செய்ய முன்வர வேண்டும். தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார். தொடர்ந்து ‘மக்களாட்சியை விதைப்போம் 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் எஸ்.குழந்தைராஜூ, உதவி செயற்பொறியாளர் சாமியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.