தேர்தல் பறக்கும் படையினர் சேலத்தில் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.86 கோடி மற்றும் 372 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி-சங்ககிரி மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக கேரளாவைச் சேர்ந்த சிரேஷ்குமார் என்பவர் வந்த காரில் சோதனை செய்தனர்.
அதில், உரிய ஆவணமின்றி ரூ.1.80 கோடி இருந்தது. விசாரணையில், கோவையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து சேலத்துக்கு கொண்டு வந்ததாக தெரியவந்தது. இருப்பினும் காரில் வங்கி அதிகாரிகளோ, அதற்கான ஆவணம் இல்லாத நிலையில், பணத்தை பறிமுதல் செய்தனர்.அதே பகுதியில் மற்றொரு காரில் நடந்த சோதனையில், ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள 372 புடவைகள் இருந்தது.
இதுதொடர்பாக காரை ஒட்டி வந்த ரவி என்ப வரிடம் விசாரித்ததில், இடங்கணசாலையில் உள்ள துணிக் கடையில் இருந்து சேலம், குகை பகுதியில் உள்ள கடைக்கு சேலையை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
இருப்பினும் சேலைக்கான ரசீது உள்ளிட்ட ஆவணம் இல்லாததால், சேலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் டவுன் போலீஸார் நடத்திய வாகனத் தணிக்கையில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.2 லட்சம் மற்றும் சிறுசேமிப்பு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.60 ஆயிரத்து 750 பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை லீ-பஜார் பகுதியில் நடந்த சோதனையில், ஓமலூரில் இருந்து மளிகைப் பொருட்கள் வாங்க வந்த வியாபாரி, ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1,36,600 மற்றும் சேலம் அம்மாப்பேட்டை தாதம்பட்டி பிரிவு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் ராமு என்பவர் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தலைவாசல் அடுத்த நத்தகரை டோல்கேட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சேலம் புதுரோடு காந்திநகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் காரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.61,500 பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதியில் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.1 கோடியே 86 லட்சத்து 58 ஆயிரத்து 850 ரொக்கம் மற்றும் 372 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.