சேலம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தேர்தல் பறக்கும்படை அலுவலர்களுக்கு மாவட்டதேர்தல் அலுவலர் அறிவுறுத்தி யுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில், சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், எஸ்பி தீபா காணிகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 240 குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு, ஜிபிஎஸ் கருவி மூலம் பறக்கும் படை உள்ளிட்ட குழுக்களின் வாகனங்களின் நகர்வுகள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றன.
இக்குழுவினர் அனைவரும் நாள்தோறும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், கண்காணிப்புமற்றும் ஆய்வுப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், வாகனச் சோதனைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகளில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மெத்தனம் காட்டுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, ஒவ்வொரு தொகுதியிலும் வாகனச் சோதனையில் மந்தமாக செயல்பட்டு வரும்பறக்கும் படையினர், நிலை கண்காணிப்புக் குழுவினர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு எச்சரித்ததுடன், பணியில் அலட்சியமாக செயல் படுவது கண்டறியப்பட்டால், பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) தியாகராஜன், (தேர்தல் கணக்கு) அமுதவள்ளி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சிராஜூதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.