சேலம் பால் மார்க்கெட் பகுதியில் சில்லறை விற்பனைக்கு கூடைகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழங்கள். படம்: எஸ். குரு பிரசாத் 
Regional03

கோடை தாக்கத்தால் தேவை அதிகரிப்பு - சந்தைக்கு எலுமிச்சை வரவு சரிவால் விலை அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

கோடை வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில், சந்தைக்கு வரத்து குறைந்துள்ள நிலையில் விலை உயர்ந்துள்ளது.

உணவு மற்றும் வழிபாட்டுக்கு எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆண்டு முழுவதும் எலுமிச்சையின் தேவை இருந்து வருகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கனிகளில் ஒன்றாக இருப்பதால், கோடை காலத்தில் எலுமிச்சையின் பழத்தின் தேவை அதிகம் இருக்கும்.

குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, வெப்பத்தை தணிக்க எலுமிச்சை பழரசத்தை மக்கள் அதிகமாக விரும்பி அருந்துகின்றனர்.

தற்போது, கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எலுமிச்சை தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சந்தைக்கு வரத்து குறைவாக இருப்பதால், அதன் விலை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக சேலம் அப்சரா பாலம் அருகே எலுமிச்சை மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ள ராமராஜன் கூறியதாவது:

சேலத்துக்கு ஆந்திர மாநிலம் கூடூர், ரேம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆண்டு முழுவதும் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதும் மட்டுமல்லாமல், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

சீசன் மற்றும் அறுவடைக் காலத்தில், நாளொன்றுக்கு 1,500 மூட்டை வரை வரத்து இருக்கும். 800 பழங்கள் கொண்ட மூட்டை ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகும்.

கோடை காலம் தொடங் கியுள்ள நிலையில், தேவை அதிகரித்தபோதும் வரத்து குறைந்துள்ளது. தற்போது, நாளொன்றுக்கு அதிகபட்சம் 700 மூட்டை வரத்து உள்ளது. இதனால், மூட்டைக்கு அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறது. சிறிய பழம் ரூ.2.50-க்கும், பெரிய முதல்தர பழம் ரூ.8 வரை விற்பனையாகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT