தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்பட குறுந்தகட்டை மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டார். படம்: என்.ராஜேஷ் 
Regional03

தேர்தல் பணியில் 20 ஆயிரம் பேர் : தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் வ.உ.சி. கலை அறிவியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் குறும்பட குறுந்தகட்டை வெளியிட்டு பேசியதாவது:

கரோனா காரணமாக வாக்குச் சாவடிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் பணியாற்ற 10,064 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருவாய் துறை, காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 8,000 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜனநாயகப் பணியில் நமது மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட உள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் புதிதாக வாக்களிப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். உங்களது வாக்கை உண்மைக்காகவும், மனசாட்சியின்படியும், சுதந்திரமாகவும் வாக்களிக்க வேண்டும். ஜனநாயக கடமையாற்றிட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து வ.உ.சி. கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT