சேலத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
பொதுக்கூட்டம் தொடங்கும் முன்னர் மேடை முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ்-க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, “நேற்று (நேற்று முன்தினம்) கரோனா தொற்று கண்டறிய பரிசோதனை மேற்கொண்டேன். இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்தபோது, எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. எனவே, மேடை ஏறாமல் கீழே இறங்கிவிட்டேன். தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளேன்” என்றார்.