சேலத்தில் மகன் காதல் திருமணம் செய்த விவகாரத்தில் தாயிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், அப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பெண்ணிடம் விசாரணை நடத்திய எஸ்ஐ இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் அன்னதானப்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சம்பூரணம் (44). இவர்களது மகன் அஜித்குமார். ராஜா இறந்த நிலையில் மகனுடன் சம்பூரணம் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித்குமார் சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் சம்பூரணத்திடம் விசாரணை நடத்தினர். இதனால், வேதனை அடைந்த சம்பூரணம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த சம்பூரணத்தின் உறவினர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, சம்பூரணத்திடம் விசாரணை நடத்திய போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமாரிடம் புகார் மனு அளித்தனர். இதனை யடுத்து, மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி, சம்பூரணத்திடம் விசாரணை நடத்திய செவ்வாய்ப் பேட்டை எஸ்ஐ ராஜாவை, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.