ஆரணியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குண்ணத்தூர். மேல்நகர், கீழ்நகர், ஆண்டிப் பாளையம், பாளைய ஏகாம்பரம், அய்யம்பாளையம், 5 புத்தூர், ராமசாணிக்குப்பம், ஒண்ணுபுரம், புதுப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட் பாளரான அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “ஆரணியை வருவாய் கோட்டமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆரணி கல்வி மாவட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. ஆரணியில் ரூ.2.50 கோடியில் புதிய காய்கறி அங்காடி, கல்பூண்டி – லாடப்பாடியில் ரூ.5.25 கோடியில் உயர்மட்டமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 15 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள் ளது. ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும். ஆரணியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். பழைய ஆற்காடு சாலையில் உள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக கட்டப்படும்.
ஆரணியில் ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைத்துத் தரப்படும். புறவழிச்சாலை முழுமையாக இணைக்கப்படும். ஆரணி-ஆற்காடு சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500, சூரிய சக்தி சமையல் அடுப்பு உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறை வேற்றப்படும்” என்றார்.
அப்போது, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் திருமால், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வேலாயுதம் உட்பட பலர் உடனிருந்தனர்.