திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று மாலை3 மணிக்கு, சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதன்லால் மைதானத்தில் பிரச்சார கூட்டம் நடக்கிறது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி,மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர்முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்முகைதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.
ராகுல்காந்தி வருகையையொட்டி சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகாணிகர் தலைமையிலான போலீஸார் ஓமலூர் விமான நிலையத்தில் இருந்து சீலநாயக்கன்பட்டி வரையிலான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதேபோல, பிரச்சார மேடையை சுற்றி வெடி குண்டு தடுப்புப் பிரிவு போலீஸார், மாநகர போலீஸார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அடையாறில்...
சேலத்தில் நடைபெறும் திமுககூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை சென்னை வரும் ராகுல்காந்தி, வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு தொலைபேசி இணைப்பகம் சாஸ்திரி நகர் முதல் அெவன்யூவில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.