தபால் வாக்குகளுக்கு சான்றொப்பம் பெறுவதில் குழப்பம் உள்ளதால் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படுகிறது. தபால் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவம் 13 ‘ஏ’-ல் அரசிதழ் அனுமதி பெற்ற அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற வேண்டும். அரசாணைப்படி குரூப் ‘ஏ’, குரூப் ‘பி’ பிரிவு அலுவலர்கள் சான்றொப்பம் இடலாம்.
அதன்படி குரூப் ‘பி’ அலுவலர்களான பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், நடுநிலை முதல் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் வரை சான்றொப்பம் இடலாம். ஆனால் அவர்கள் சான்றொப்பமிட்ட, தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் செல்லாது எனக் கூறுகின்றனர்.
இதனால் சான்றொப்பமிடும் குரூப்‘பி’ பிரிவு அலுவலர்களின் பதவி விவரங்களை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தமிழக தமிழாசிரியர் கழக முன்னாள் மாநில பொதுச் செயலாளர் நீ.இளங்கோ கூறியதாவது:
குரூப் ‘பி’ அலுவலர்களின் பதவி குறித்த விவரம் அரசாணையில் இல்லை. ஆனால் ஊதிய நிலை 16 முதல் ஊதிய நிலை 24 வரை குரூப் ‘பி’ அலுவலர்களாகக் கருத வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் முதல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வரை குரூப் ‘பி’ பிரிவு அலுவலர்களாக உள்ளனர். ஆனால் அவர்களது சான்றொப்பத்தை அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர்.அப்படியென்றால் குரூப் ‘பி’ பிரிவு அலுவலர்களின் பதவி விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் சான்றொப்பமிட வட்டத்துக்கு ஒரு துணை வட்டாட்சியரை அதிகாரிகள் நியமித்துள்ளனர். அவர்களிடம் சான் றொப்பம் பெறுவதில் சிரமம் உள்ளது. இல்லாவிட்டால் கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றனர்.