சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வசதியாக 56,496 முழுக்கவச பாதுகாப்பு உடைகள் பயன்படுத்தப்படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி ஊழியர்கள், வாக்காளர்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவை பயன்படுத்த உள்ளனர்.
இதன்படி, மாவட்டத்தின் 11 தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளுக்குத் தேவைப்படும் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கரோனா தொற்று பரவல் தடுப்புக்கான உபகரணங்கள், சேலம் கோட்டை மாநகராட்சி பல்நோக்கு கூடத்தில் இருந்து தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் ஆய்வு செய்தார். பின்னார் அவர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு உட்பட்ட 4,280 வாக்குச் சாவடிகளிலும் கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி, தெர்மல் ஸ்கேனர் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வெப்ப பரிசோதனை செய்ய 4,494 தெர்மல் ஸ்கேனர் கருவிகள், கிருமிநாசினி 500 மில்லி பாட்டில்கள் 29,532, முக பாதுகாப்பு கவசங்கள் 47,080, தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோரின் பயன்பாட்டுக்கு 2,82,480 முகக் கவசங்கள், வாக்காளர்கள் பயன்பாட்டுக்கு 1,28,400 முகக் கவசங்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் பயன்பாட்டுக்காக கிருமி நாசினி 100 மில்லி பாட்டில்கள் 47,080 ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கையுறைகள் 1,41,240, இவை அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க 23,540 உறைகள், இப்பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கு 4,708 பைகள், வாக்காளர்களின் பயன்பாட்டுக்காக 43,61,962 ஒரு முறை பயன்படுத்தும் பாலித்தீன் கையுறைகள், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கு ஏதுவாக 56,496 முழுக்கவச உடைகள் ஆகியவையும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.