தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் 13 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 பள்ளிகள், 4 கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 227 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கும்பகோணத்தில் நேற்று புதிதாக அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியர், ஆடுதுறையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவர்கள் என மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் கூறியபோது, ‘‘கரோனா தொற்று ஏற்பட்ட பள்ளிகள் அனைத்துக்கும் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.