திருநெல்வேலி மாநகரில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் மாநகர காவல் ஆணையர் அன்பு நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகரில் திருநெல்வேலி, பாளையங் கோட்டை சட்டப்பேரவை தொகுதி களுக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அன்பு நேற்று 2-வது நாளாக ஆய்வு செய்தார். பாளையங்கோட்டை ரஹ்மத்நகர், சாந்தி நகர், கோட்டூர், திம்மராஜபுரம், படப்பகுறிச்சி, மேலப்பாளையம், அழகநேரி, குறிச்சி பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் மகேஷ்குமார், உதவி ஆணையர் ஜான் கிறிஸ்டோபர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.