தனியார் விமான நிறுவன சேவையின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று இலவசமாக விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுடன் காத்திருந்த மாணவிகள். 
Regional02

தனியார் விமான நிறுவன ஆண்டுவிழா - அரசுப் பள்ளி மாணவர்கள் விமானத்தில் இலவச சுற்றுலா :

செய்திப்பிரிவு

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில், ‘ட்ரூஜெட்’ தனியார் விமான நிறுவனத்தின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அந்நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் இலவசமாக விமானம் மூலம் சென்னைக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ், ‘ட்ரூஜெட்’ தனியார் விமான போக்குவரத்து சேவை கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தொடங்கப்பட்டது.

சேலத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் விமான சேவை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

நேற்று (25-ம் தேதி) விமான சேவையின் 4-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதையொட்டி, அந்நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்காக அரசுப் பள்ளியைச் சேர்ந்த 21 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 30 பேர் நேற்று காலை சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா புறப்பட்டு சென்றனர்.

முன்னதாக, மாணவ, மாணவியர்களுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக மாணவ, மாணவியர்கள் கூறும்போது, “விமான பயணம் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைவதை எண்ணி பெருமை கொள்வதுடன், இந்த வாய்ப்பை அளித்த விமான சேவை நிறுவனத்துக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT