Regional01

கறம்பக்குடி அருகே அம்புக்கோவிலில் - இந்திய கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம் :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்புக்கோவில் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் அண்மையில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அங்கு வேலையில் ஈடுபட்ட பெண்கள் சிலர், தங்களுக்கு வரும் குடிநீர் கலங்கலாக வருவதாக அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனராம். இவ்வாறு, புகார் தெரிவித்தோரின் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணிக்கான அட்டைகளை ஊராட்சித் தலைவர் சுமன் கைப்பற்றிக் கொண்டு கொடுக்க மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜேசுராஜ் தலைமையில் அம்புக்கோவில் ஊராட்சி அலுவலகம் அருகே நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது, கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT