திருநெல்வேலி அருகே பிரச்சார வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் தலைமையில் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லட்சுமணன், மானூர் பகுதியில் கூட்டணி கட்சியின ருடன் இணைந்து நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மானூர் ரஸ்தா பகுதிக்கு சென்றபோது வேட்பாளரின் பிரச்சார வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பிரச்சார வாகனத்துக்கான அனுமதி கடிதத்தை போலீஸாரிடம் திமுகவினர் காண்பித்தனர். ஆனாலும், திமுகவினருடன், போலீஸார் வாக்குவாதம் செய்தனர்.
போலீஸாரைக் கண்டித்து வேட்பாளர் லட்சுமணன் தலைமையில், ஒன்றிய திமுக செயலாளர்கள் அன்பழகன், அருள்மணி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ.க.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரச்சாரம் செய்யுமுன் உள்ளூர் போலீஸில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஏற்கெனவே அனுமதி பெறப்பட்டுள்ளதை திமுகவினர் விளக்கினர். அரைமணி நேரத்துக்குப்பின் பிரச்சார வாகனம் செல்ல போலீஸார் அனுமதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.