சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவனை ஆதரித்து அண்ணாநகர் பகுதியில் திறந்த வேனில் நின்றவாறு அவர் பேசினார்.
அப்போது மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறிய அவர், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டைஎடுத்துக் காட்டினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எதுவும் நடைபெறாததை சுட்டிக் காட்டிய உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு தூக்கி வந்துவிட்டேன் எனக் கூறியபடி எய்ம்ஸ் என எழுதப்பட்டிருந்த ஒரு செங்கலை தூக்கிக் காண்பித்தார். இதற்கான செலவாக ரூ.75 கோடி கணக்கு காட்டியிருக்கிறார்கள். அங்கே இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான்தூக்கி வந்துவிட்டேன். இதனால்கடந்த 2 நாட்களாக மருத்துவமனையை காணவில்லை என தேடுகிறார்களாம் என கிண்டலாக தெரிவித்தார்.
தொடர்ந்து பழனிசாமி எவ்வாறுமுதல்வரானார் என்பதை குறிப்பிட்டு பேசிய அவர் சில படங்களை எடுத்துக் காட்டினார். செல்லாத நோட்டு, செங்கல் மற்றும் படங்களை அவர் காட்டிய போது மக்கள் ஆரவாரம் செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மறக்காமல் குறிப்பிட்ட அவர், இதில் உயிரிழந்த 13 பேரின் பெயர்களையும் குறிப்பிட்டு இந்தக் கொடூரக் கொலைக்கு காரணமானவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு, பாஜகவுக்கானது என்பதைமறந்துவிடக் கூடாது. தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் அதிமுக அரசு அடகு வைத்துவிட்டது. நமதுகல்வி உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்ததால் தமிழகத்தில் மட்டும் 14 மாணவ, மாணவிகள் இதுவரைஇறந்துள்ளனர். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டும். என்றார்.
இதேபோல் திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதாஆர்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோரை ஆதரித்தும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.