சேலம் மாநகராட்சியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட சகாதேவபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் பணிகள், குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தீவிரப்படுத்தும் வகையில் 120 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.களப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் 200 வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிய வேண்டும். அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ அலுவலர்களுக்கு தெரிவித்து கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு தெருவில் 3 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப் பட்டால், அத்தெருவை தனிமைப் படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பயிற்சியில், மாநகர நல அலுவலர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.