கிருஷ்ணகிரியில் அமமுக சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகியின் கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் கல்வீசி உடைத்ததாக போலீஸில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சிறுபான்மை பிரிவு மாநில துணை செயலாளராக உள்ளவர் ஷாபுதீன். இவர் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் மூன்றாவது தெருவில் வசித்து வருகிறேன். அமமுக, நிர்வாகியாக இருக்கும் நான் எங்கள் கூட்டணி சார்பாக கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசியத் தலைவர் அசாதுதின் ஒவைசி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்பினேன்.
இரவு 11 மணியளவில் வீட்டில் இருக்கும்போது திடீரென சில மர்ம நபர்கள் வீட்டின் மீது கற்கள்வீசியும், வெளியே நின்றிருந்த கார் கண்ணாடிகளை சேதப்படுத்தியும், தாக்குதல் நடத்தினர். தேர்தல் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு நடைபெற்ற தாக்குதலினால் வீட்டில் இருந்த பெண்களும், குழந்தைகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே, இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.