தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சேலம் வந்திருந்த துணை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 183 பேர் சேலம் வந்தனர். இவர்கள் சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானம் மற்றும் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள முகாம்களில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில். நேற்று அதிகாலை லைன்மேடு ஆயுதப்படை மைதான காவலர் சமுதாய கூடத்தில் தங்கியிருந்த வீரர் அசெஷ்குமார் பூட்டியா (31), தன்னிடம் இருந்த ஏகே-47 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
இதில், அவரது கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் மயங்கி விழுந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தகவல் அறிந்த சேலம் அன்னதானப்பட்டி போலீஸார் ஏகே-47 ரக துப்பாக்கியை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தகவல் அறிந்த தேர்தல் பார்வையாளர் சாகத் பிரகாஷ் பாண்டே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அசெஷ்குமார் பூட்டியாவை சந்தித்ததுடன், மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.