Regional02

அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்துக்கு ஆபத்தானது : ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

செய்திப்பிரிவு

அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்துக்கு ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி வேட்பாளர் எம்.சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), புதுக்கோட்டை தொகுதி வேட்பாளர் வி.முத்துராஜா(திமுக) ஆகியோரை ஆதரித்து வீரப்பட்டி, புதுக்கோட்டை, சத்தியமங்கலம் மற்றும் மேலூர் அகிய இடங்களில் நேற்று அவர் பேசியது:

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழுக்கு ஆபத்து ஏற்படும். தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியிடப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற திட்டத்துடன், பாஜகவினர் தேச ஒற்றுமையை சிதைக்கப் பார்க்கின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்துவிட்டு, விவசாயிகளுக்கு ஆதரவானவர் என கதை விடுகிறார் முதல்வர் பழனிசாமி.

இங்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை ஆகியவை நிகழ்ந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என முதல்வர் கூறுகிறார்.

கல்விக்கொள்கையில் கல்வி தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு கூறுவதை அதிமுக ஆதரிக்கிறது.

அரசே நிர்வகித்து வரும் கோயில் நிர்வாகத்தை தனியார் வசமாகிய பூசாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது பாஜக தேர்தல் அறிக்கை. எனவேதான் அதிமுக, பாஜக கூட்டணி ஆபத்தானது என்கிறோம். தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றார்.

SCROLL FOR NEXT