திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சுதந்திர இந்தியா வைரவிழா புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் கடந்த 12-ம் தேதி தொடங்கின. இந்த விழா வரும் 15.8.2022 வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் மாவட்ட அறிவியல் மையம் இணைந்து அறிவியல் மைய வளாகத்தில் 3 நாள் புகைப்பட கண்காட்சியை நடத்துகின்றன. இந்த கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்து பார்வை யிட்டார். மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துகுமார், களவிளம்பர அலுவலர் ஜுனி ஜேக்கப், உதவியாளர் போஸ் வெல் ஆசீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்காட்சியில் மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், நேதாஜி போன்ற தலைவர்களின் வாழ்க்கையை விவரிக்கும் அரிய புகைப்படங்கள் இடம்பெற்று ள்ளன. பொதுமக்கள் இந்த கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம் என்று, கள விளம்பர அலுவலர் தெரிவித்தார்.