தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் தொகுதிகளில் தலா 15வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மற்ற 4 தொகுதிகளிலும் (கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், வைகுண்டம், தூத்துக்குடி)15 பேருக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு வாக்குப்பதிவு அலகில் (பேலட் யூனிட்) 15 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் நோட்டா ஆகியவை மட்டுமே இடம்பெற முடியும். எனவே, 4 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஒருகட்டுப்பாட்டு அலகுடன் 2 வாக்குப்பதிவு அலகுகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தை பொறுத்தவரை 6 தொகுதிகளிலும் மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக ஏற்கெனவே 2,518 வாக்குப்பதிவு அலகுகள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது 4 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு வாக்குப்பதிவு அலகு பயன்படுத்த வேண்டியிருப்பதால், கூடுதலாக 1,736 வாக்குப்பதிவு அலகுகள் தேவைப்படுகின்றன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதுபயன்படுத்தப்பட்டு குடோனில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலகுகளை எடுத்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடோன்களில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு அலகுகள் நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியே எடுக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட குடோன்களில் உள்ள வாக்குப்பதிவு அலகுகளை விருதுநகர், தென்காசி, கரூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குடோன்களில் இருந்து எடுக்கப்பட்ட 1,120 வாக்குப்பதிவு அலகுகள் விருதுநகர் மாவட்டத்துக்கும், 110 அலகுகள் தென்காசி மாவட்டத்துக்கும், 2500 அலகுகள் கரூர் மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.