சிறுபான்மையின மக்களின் குரலாக நாங்கள் ஒலிப்போம் என கிருஷ்ணகிரியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தேசியத் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தற்போது நடைபெறவுள்ள தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இங்குள்ள அரசியல் வெற்றிடத்தை எங்களது கூட்டணி நிரப்பும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். அமமுக கூட்டணியில் டிடிவி தினகரன் எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கி உள்ளார். எங்களது கூட்டணிக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு உள்ளது. சிறுபான்மை மக்களின் குரலாக நாங்கள் ஒலிப்போம். தேவைகளை பூர்த்தி செய்வோம். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மஸ்தான் எங்களிடம் பேசினார்.பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. திமுக சார்பில் பேசவில்லை. கூட்டணியிலும் சேர்க்கவில்லை. தமிழகத்தில் இன்றும், நாளையும் அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறேன். இதனை தொடர்ந்து வரும் 30-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை 2-வது கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். இவ்வாறு ஒவைசி கூறினார். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் அமீனுல்லாவை ஆதரித்து அசாதுதின் ஒவைசி பேசினார்.