சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பணிபுரியும் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்கப் பயிற்சி சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பயிற்சிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பயிற்சியை பொது பார்வையாளர் டாக்டர் ரூபேஷ்குமார் ஆய்வு செய்து கூறியதாவது:
தேர்தல் அமைதியாக நடைபெறுவதில் மண்டல அலுவலர்களின் பொறுப்பு குறிப்பிடத்தக்கது. வாக்குச் சாவடி அலுவலர்கள் அனைத்து தேர்தல் பணியிலும் ஒருங் கிணைப்பாளர்களாக செயல்பட வேண்டும். எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வதை முறையாக தெரிந்து, வாக்குப்பதிவு தொய்வின்றி நடைபெறும் வகையில் இப்பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், ஜாரி கொண்டலாம்பட்டி, ரங்காபுரம், அம்பேத்கர் காலனி, மணியனூர் காத்தாயம்மாள் நகர் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து, வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தினர்.
ஆய்வின்போது, மாநகராட்சி பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர்கள் லலிதா, பழனிசாமி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.