தூத்துக்குடியில் மீனவரை அடித்துக் கொலை செய்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சிலுவை ராஜா(42), மீன்பிடித் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடற்கரைக்கு சென்று, படகில் வலைகளை ஏற்றி விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் மொட்டைக் கோபுரத்தில் இருந்து திரேஸ்புரம் கடற்கரைக்கு செல்லும் சாலையில் விவேகானந்த நகர் கரைவலை சாலை அருகே பலத்த காயங்களுடன் சிலுவைராஜா இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும்போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். சிலுவைராஜா தலையில் கல்லால் தாக்கியும், முதுகில் பாட்டிலால் குத்தியும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. குடி போதையில் ஏற்பட்ட தகராறில் சுமார் 3 பேர் சேர்ந்து அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.