தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு காரணமான அதிமுக, பாஜகவுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என, தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திட்டங்களை சொல்லி முதல்வர் பழனிசாமியால் மக்களிடம் வாக்கு கேட்க முடியுமா? ஏதாவது சாதனைகளை சொல்ல முடியுமா? அவரால் வேதனைகளைத்தான் சொல்ல முடியும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான முறையில், அறவழியில் போராடிய 13 பேரை கொடூரமாக சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு இதுவரை தண்டனை கொடுக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ‘‘அப்படியா எனக்கு தெரியாது. டிவியில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன்’’ என்று கூறியுள்ளார். முதல்வர் பதவியில் இவர்நீடிக்கலாமா? துப்பாக்கிச் சூட்டில்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் தகுதியான வேலை வழங்கப்படும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு காரணமான அதிமுக, பாஜகவுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,000 உதவித் தொகையை ஜூன் 3-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் வழங்குவோம். அதிமுக,பாஜகவுக்கு தகுந்த பாடம் புகட்டமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.
இதேபோல சென்னை ராயபுரத்தில் 8 திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும். கேரளா, மேற்கு வங்காளம் போல அந்த சட்டத்தை தமிழகத்துக்குள் நுழையவிடமாட்டோம்.
இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது ராஜ்யசபாவில் அதிமுக சார்பில் ஆதரித்துப் பேசியதுடன் வாக்கும் அளித்தனர். இப்போது அக்கட்சியினர் உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். எனவே, ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் ஜெயக்குமாரை படுதோல்வி அடையச் செய்யுங்கள்.
முதல்வர் பழனிசாமி உழைத்துஉயர்ந்ததாகக் கூறி வருகிறார். அவர் உழைத்து வந்தாரா, ஊர்ந்து வந்தாரா என்று சமூக வலைதளங்களில் வந்து கொண்டிருக்கிறது. எனது உழைப்பு பற்றிசொல்ல முதல்வர் பழனிசாமிக்குதகுதி இல்லை" என்று ஸ்டாலின் பேசினார்.