பிற மாநிலங்களில் சுருக்கு மடி வலை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் சுருக்குமடி வலைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசைக் கண்டித்தும், சுருக்குமடி வலைக்கு மீண்டும் அனுமதி வழங்க வலியுறுத்தி யும் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி கிராமத்தில் மீனவர்கள் நேற்று கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசு சுருக்குமடி வலைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவேற்றிய கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
ஏற்கெனவே, சுருக்குமடி வலை மீதான தடையை நீக்கக் கோரி பூம்புகார் மீனவ கிராமம் தலைமையிலான 9 மீனவ கிராமங்கள் மற்றும் நாகை நம்பியார் நகர் மீனவக் கிராமம் ஆகியவை தேர்தலை புறக்கணிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.