Regional03

மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகரிப்பு - 14 கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் : முன்னெச்சரிக்கையாக இல்லாததால் நடவடிக்கை

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்காத 14 கல்வி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி, இதுவரை ஒரு பல்கலைக்கழகம், 2 கல்லூரிகள், 11 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கும்பகோணத்திலுள்ள அரசு உதவிபெறும் மகளிர் பள்ளியில் மேலும் 9 மாணவிகள், ஒரு ஆசிரியைக்கும், மாரியம்மன் கோவிலிலுள்ள அரசுப் பள்ளியில் 2 மாணவர்களுக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 5 மாணவர்களுக்கும் புதிதாக தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து ஆட்சியர் ம.கோவிந்தராவ், செய்தியாளர்களிடம் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 11 பள்ளிகள், 3 கல்லூரிகளில் தொகுப்பாக (3 பேருக்கும் அதிகமாக) கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்காத இப்பள்ளிகள், கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் இதுவரை 6,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 60 பேர் குணமடைந்து வீடுதிரும்பி விட்டனர்.

மேலும் சில பள்ளிகளில் 1 அல்லது 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதால், மற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது, 9, 10, பிளஸ் 1 வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், தொடர்ந்து கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT