ஞாயிறு விடுமுறை நாளான நேற்று சேலம் அண்ணா பூங்காவில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூங்காவில் கரோனா வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சேலம் மாநகரின் மையப்பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூங்கா உள்ளது. இங்கு செயற்கை அருவி, பனி கொட்டும் அரங்கு, நடனமாடும் நீரூற்று, குழந்தை களுக்கான நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது.
மினி தீம் பார்க் போல அமைக்கப்பட்டுள்ள இங்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் எதுவும் இல்லாத நிலையில், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் மாலை நேரத்தில் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக அண்ணா பூங்காவுக்கு வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவுக்கு வந்த நிலையில் தொடர்ந்து, பூங்காவுக்குள் மக்கள் உள்ளே வருவதும் வெளி யேறுவதுமாக இருந்தனர்.கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர் என பார்வையாளர்கள் குற்றம்சாட்டினர்.இதனிடையே பூங்கா அமைந்துள்ள சாலையில் இரவில் நெரிசல் அதிகரித்ததால் அங்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.