மத்திய அரசைக் கண்டித்து உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள்,தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறினார்.
இதுகுறித்து உதகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்கள், பிரிவு 17 நிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், யானை வழித்தட நிலம் 515 ஏக்கர் என்று நிலையில், அதை 7000 ஏக்கராக மாற்றியதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், யானை வழித்தட ஆய்வுக் குழுவில் உள்ள பிரவீன் பார்கவா உட்பட 2 பேரை குழுவில் இருந்துநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். நீலகிரி மாவட்டத்தில் பாஜக போட்டியிடும் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் மத்திய அரசை எதிர்த்தும், வேளாண் சட்டம் குறித்து எடுத்துக்கூறியும் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.