Regional02

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் - கால்நடை சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் :

செய்திப்பிரிவு

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த கால்நடை சந்தையில், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கொங்கணாபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை கூடும். நேற்று நடந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் 3,000 ஆடுகள், 500 பந்தயச் சேவல்கள், 2,000 கோழி மற்றும் சேவல்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும், 32 டன் பருப்பு வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், 10 கிலோ வரையான ஆடுகள் ரூ.6,000 முதல் ரூ. 7,000 வரையும், 20 கிலோ வரையான ஆடுகள் ரூ.11,000 முதல் ரூ.13,000 வரையும் விற்பனையானது. குட்டி ஆடுகள் ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை விற்பனையானது.

பந்தயச் சேவல்கள் குறைந்த பட்சம் ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.6,000 வரையும், வளர்ப்புக் கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது.

மேலும், சந்தையில் தானியங்கள் விற்பனையும் நடந்தன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரையும், பெரிய வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரையும் 6 கிலோ புளி ரூ.600, தக்காளி ஒரு கூடை ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது.

இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறும்போது, “சந்தையில் காய்கறி, ஆடு, கோழி, பந்தயச் சேவல் மற்றும் பருப்பு வகைகளை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் நேற்று ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT