Regional02

தொழிலாளியை சுட்டுக் கொன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

சேலம் அருகே சொத்து தகராறில் அண்ணனை, தம்பி சுட்டுக் கொன்ற வழக்கில், மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் இரும்பாலை அடுத்த சித்தனூர் தெற்கு தெருவைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளி செல்வம். இவரது தாய் பெரியதாய் கொண்டலாம்பட்டியில் உள்ள பெரியப்புத்தூரில் வசித்து வருகிறார். கடந்த 18-ம் தேதி தாயை பார்க்க வீட்டுக்கு வந்த செல்வத்தை, அவரது தம்பி சந்தோஷ், நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். போலீஸ் விசாரணையில், சொத்து பிரச்சினையில் அண்ணனை, தம்பி சுட்டுக் கொன்றது தெரிந்தது. மேலும், துப்பாக்கி உரிமம் இல்லாதது என தெரிந்தது.

இதையடுத்து, சந்தோஷை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், பெரியப்புத்தூரைச் சேர்ந்த இளையராமன் (51) என்பவர் மூலம் வாழப்பாடி அடுத்த நீர்முள்ளிகுட்டை, செல்வகணபதி நகரைச் சேர்ந்த சின்ராஜ் (55) என்பவரிடம் நாட்டுத் துப்பாக்கி வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து, சின்ராஜ், இளையராமனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT