குரும்பூர் அருகே பிரச்சாரத்துக்கு சென்ற அமமுக வேட்பாளரை கிராமத்துக்குள் அனுமதிக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி அமமுக வேட்பாளராக வடமலைபாண்டியன் போட்டியிடுகிறார். நேற்று காலை 9 மணியளவில் இவர், குரும்பூர் அருகே உள்ள நல்லூரில் முக்கிய பிரமுகரை சந்திப்பதற்காக காரில் வந்துள்ளார்.
அப்போது நல்லூர் விலக்கில் நின்ற திமுகவினர் சிலர்,அவரை நல்லூருக்குள் அனுமதிக்க மறுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வடமலைபாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து குரும்பூர் காவல் நிலையத்தில் வேட்பாளர் அளித்தபுகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.