Regional02

ஓஎன்ஜிசி ஊழியர்களை சிறைபிடித்த மக்கள் :

செய்திப்பிரிவு

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகம் நகர் பகுதியில், ஓஎன்ஜிசி நிறுவனம் புதிதாக கச்சா எண்ணெய் எடுக்கும் கிணறு அமைத்து வருகிறது.

இதற்காக, அந்தப் பகுதி வழியாக ஓஎன்ஜிசி வாகனங்கள் செல்வதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடங்கியது. ஆனால், இதுவரை அந்தச் சாலை முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனால், அந்தப் பகுதி முழுவதும் செம்மண் புழுதியாக காட்சியளிக்கிறது. இதனால், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்த் தாக்குதலுக்கு உள்ளாவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பணி செய்வதற்காக ஆறுமுகம் நகர் பகுதிக்குள் நுழைய முயன்ற ஓஎன்ஜிசி ஊழியர்களை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்து, அந்தச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவாரூர் போலீஸார், பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அப்போது, ஒரு வாரத்துக்குள் சாலைப் பணியை முடித்துவிடுவதாக ஓஎன்ஜிசி அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

SCROLL FOR NEXT