தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பாலித்தீன் கையுறை வழங்கப்படவுள்ளது. மேலும் கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்யவும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.இவர்களுக்கு ரூ.250 ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களை தேர்வு செய்யும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் எந்த கட்சியையும் சாராதவராக இருத்தல் வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை 7,24,484 ஆண் வாக்காளர்கள், 7,57,151 பெண் வாக்காளர்கள், 164 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14,81,799 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாவட்டத்தில் 894 இடங்களில் மொத்தம் 2,097வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 தொகுதிகளுக்கும் மொத்தம் 4,194 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.