கிருஷ்ணகிரியில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்து கலந்து கொண்டார். 
Regional03

100% வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டமாக - கிருஷ்ணகிரியை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் : பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தை 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்ற மாவட்டமாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், முதல் தலைமுறை வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள், ‘100 சதவீதம் வாக்கு, அதுவே எங்கள் இலக்கு’ என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டமாக உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய பேரணி, ராயக்கோட்டை சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் தேவராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் சின்னசாமி, பொன்னாலா, கல்லூரி முதல்வர் லட்சுமி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT