கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் நேற்று ஆய்வு செய்தார். அருகில் எஸ்பி பண்டிகங்காதர். 
Regional03

கிருஷ்ணகிரியில் நாளை தமிழக முதல்வர் பிரச்சாரம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி ஆய்வு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை தமிழக முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்வதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் பழனிசாமி நாளை (21-ம் தேதி) அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி நாளை மாலை 5.30 மணிக்கு ஊத்தங்கரையிலும், மாலை 6.45 மணிக்கு பர்கூரிலும், இரவு 8 மணிக்கு கிருஷ்ணகிரியிலும், 9 மணிக்கு சூளகிரியிலும் பிரச்சாரம் செய்கிறார். ஓசூரில் இரவு தங்கும் முதல்வர், 22-ம் தேதி காலை 9 மணிக்கு ஓசூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

முதல்வர், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தருவதையொட்டி நேற்று சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் கிருஷ்ணகிரியில் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதி உட்பட முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் பாதுகாப்புப் பணிகளை போலீஸார் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தேர்தல் பணிகள் தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்பி பண்டி கங்காதர் மற்றும் போலீஸாருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் ஏடிஎஸ்பிக்கள் அன்பு, ராஜூ, டிஎஸ்பிக்கள் கிருஷ்ணகிரி சரவணன், பர்கூர் தங்கவேல், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்புமணி, பாஸ்கர், உதவி ஆய்வாளர் சிவசுந்தர் உள்ளிட்ட போலீஸார் பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT