கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட கடைசி நாளான நேற்று 49 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட பலர் மனுத்தாக்கல் செய்தனர்.
ஊத்தங்கரை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட 7 பேரும், பர்கூர் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உட்பட 9 பேரும், கிருஷ்ணகிரி தொகுதியில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) வேட்பாளர் அமீனுல்லா உட்பட 6 பேரும், வேப்பனப்பள்ளி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஜெயபால் உட்பட 12 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தளி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார்,தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆணையர்(கலால்) ரவிச்சந் திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) வேட்பாளர் அசோக்குமார், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ரவி, நியூ ஜெனரேஷன் பீப்பிள் பார்ட்டி வேட்பாளர் உஷா உட்பட 4பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று திமுக மாற்று வேட்பாளராக ஓசூர் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, சுயேச்சை வேட் பாளராக ஓசூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி முத்தமிழ்முதல்வன் உள்ளிட்ட 9 பேர் தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் நேற்று மட்டும் 49 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் போட்டியிட அதிமுக, திமுக உட்பட மொத்தம் 120 பேர் இதுவரை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என மொத்தம் 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிட அதிமுக, திமுக, பாமக, சிபிஎம், அமமுக, மநீம, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 122 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.