தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசு பறித்துள்ளது என கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், பர்கூர் மதியழகன், வேப்பனப்பள்ளி முருகன், ஓசூர் பிரகாஷ், ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரிய வெற்றியைத் தந்த மக்கள், சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றியை தேடித் தர தயாராகி விட்டனர். இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறி வந்த நிலையில், தமிழகத்தில் அவர்களுக்கு நீங்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்தீர்கள்.
3 ஆண்டுகளாக தமிழகம் பல்வேறு புயல், வறட்சிகளைச் சந்தித்தது. 40 ஆயிரம் கோடி ரூபாய் கேட்ட தமிழக அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு தந்தது. தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்தது. தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த நலத்திட்டங்கள், நிதி ஆதாரங்களையும் வழங்க வில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புதிய இந்தியாவை உருவாக்கப் போகி றேன் என்றார் மோடி. இதுவரை புதிய இந்தியா பிறக்கவில்லை.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.