சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் அம்மாப்பேட்டை, ஆட்டையாம்பட்டியில் முத்ரா ஜூவல்லர்ஸ், எஸ்.எம்.கோல்டு நகைக் கடை இயங்கி வந்தது. இக்கடையில் திருச்செங்கோடு மரபரை தென்னமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (52) என்பவர் நகை திட்டத்தில் ரூ.31.10 லட்சம் கட்டியுள்ளார். மேலும், இக்கடையில் பழைய தங்க நகைக்கு புதிய நகை திட்டத்தில் ரூ.18 லட்சம் கட்டியுள்ளார்.
ஆனால், கடை உரிமையாளர் முருகவேல் மற்றும் அவரது மனைவி கலைவாணி ஆகியோர் விஜய்குமாருக்கு நகை கொடுக்கவில்லை. பணத்தை கேட்டபோது பணத்தையும் கொடுக்கவில்லை. மேலும், கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுதொடர்பான புகாரின்பேரில், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, இந்த நகைக் கடையில் பணம் முதலீடு மற்றும் நகை திட்டத்தில் சேர்ந்து ஏமாந்த வாடிக்கையாளர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் சேலம் ஜாகீர் அம்மாப்பாளையம், வெண்ணங்குடி முனியப்பன் கோயில் பின்புறம் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.